புதுச்சேரி லாஸ்பேட்டை அரசுப் பள்ளியில் ஆசிரியர் தின விழா: சாதனை ஆசிரியர்கள், மாணவர்களுக்குப் பாராட்டு!
புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள நாவலர் நெடுஞ்செழியன் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் கல்வியில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகள் கௌரவிக்கப்பட்டனர்.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவில், ஸ்ரீ சப்தகிரி அறக்கட்டளை பொறுப்பாளர் ரமேஷ்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவர் ஆசிரியர்களின் தன்னலமற்ற கல்விப் பணியைப் பாராட்டிப் பேசி, ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கிச் சிறப்பித்தார்.
மேலும், பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுத் தந்த ஆசிரியர்களுக்கும், சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்து சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கும் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கிப் பாராட்டப்பட்டது. அத்துடன், கல்வி அமைச்சர் விருது பெற்ற ஆசிரியை பார்வதி அவர்களுக்குப் பள்ளியின் சார்பில் சிறப்புப் பாராட்டும் வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

