திருபுவனையில் பள்ளிகள், கோயில்கள் அருகே உள்ள ரெஸ்டோ பார்களை மூடக்கோரி விசிக கண்டன ஆர்ப்பாட்டம்!
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலம் திருபுவனை தொகுதியில் பள்ளிகள், கோயில்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு மிக அருகில் இயங்கி வரும் ரெஸ்டோ பார்களை உடனடியாக நிரந்தரமாக மூடக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் தீவிர கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குறிப்பாக திருபுவனை பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் ரெஸ்டோ பாரினால் அப்பகுதி பொதுமக்கள், பெண்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் தினமும் பெரும் இடையூறுகளைச் சந்தித்து வருவதாக ஆர்ப்பாட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் சாய் சரவணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசைக் கண்டித்து தீவிர கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பொதுமக்களின் பாதுகாப்புக்கும் அமைதிக்கும் அச்சுறுத்தலாக விளங்கும் இந்த ரெஸ்டோ பார்களை அரசு உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்தகட்டமாக தேசிய நெடுஞ்சாலையில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எச்சரித்தனர்.


