நேபாள பேரிடரில் சிக்கியவர்களை விரைந்து மீட்க வேண்டும்: புதுச்சேரி பாஜக ஆழ்ந்த இரங்கல்!

புதுச்சேரி: அண்டை நாடான நேபாளத்தின் திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு சம்பவத்திற்கு புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சி ஆழ்ந்த இரங்கலையும், வேதனையையும் தெரிவித்துள்ளது.
இமயமலைப் பகுதியில் திடீரென பனிப்பாறை உடைந்ததன் காரணமாக ஏற்பட்டதாகக் கூறப்படும் இந்தக் கோர இயற்கைப் பேரிடரில், நேபாளத்திற்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் பலர் சிக்கியுள்ளனர். குறிப்பாக, இந்தப் பேரிடரில் சிக்கியுள்ள பலரைப் பற்றிய தகவல்கள் இதுவரை கிடைக்காதது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் துரிதப்படுத்தப்பட்டு, அங்கு சிக்கியுள்ள அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும் என்று புதுச்சேரி பாஜக பிரார்த்தனை தெரிவித்துள்ளது. மேலும், இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் தடையின்றி விரைந்து கிடைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

