புதுச்சேரியில் ‘வந்தே மாதரம்’ இளைஞர் முகாம் தொடக்கம்: துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

புதுச்சேரி: ‘மேரா யுவா பாரத்’ (MY Bharat) அமைப்பின் சார்பில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் கலாச்சாரப் பரிமாற்றத்தை வலியுறுத்தும் ‘வந்தே மாதரம்’ இளைஞர் முகாம் புதுச்சேரியில் சிறப்பாகத் தொடங்கியது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களை ஒன்றிணைக்கும் இந்த விழிப்புணர்வு முகாமை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கே. கைலாஷ்நாதன் முறைப்படி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஏ. நமச்சிவாயம், அரசுச் செயலாளர் ஏ. முத்தம்மா ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ (Ek Bharat Shreshtha Bharat) என்ற உன்னத நோக்கத்தை அடித்தளமாகக் கொண்டு நடத்தப்படும் இந்த முகாமில் இளைஞர்களின் சக்தி மற்றும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பு போற்றப்பட்டது.
இம்முகாமில் ஒடிசா, உத்தரகாண்ட், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான இளைஞர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர். பல்வேறு பிராந்தியங்களின் கலை, கலாச்சாரம், வாழ்க்கை முறை மற்றும் பாரம்பரியங்களைப் பரஸ்பரம் பகிர்ந்துகொள்ளும் வகையில் சிறப்பு அமர்வுகள் மற்றும் கலந்துரையாடல்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
நாட்டு நலப்பணி மற்றும் இளைஞர் நலத்துறை சார்ந்த முன்னெடுப்புகளின் மூலம், இளைஞர்களிடையே தேசப்பற்றையும் ஒருமைப்பாட்டு உணர்வையும் வளர்ப்பதே இத்தகைய தேசிய முகாம்களின் பிரதான இலக்காகும். இளைஞர்கள் தங்களது அறிவாற்றலையும் அனுபவங்களையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு, புதிய இந்தியாவை வழிநடத்தத் தயாராக வேண்டும் என விழாவில் எடுத்துரைக்கப்பட்டது.
📸 புகைப்படத் தொகுப்பு (Photo Gallery)


