சேலியமேடு பள்ளிக்கு சிமெண்ட் சாலை அமைக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் தீர்மானம்
புதுச்சேரி, செப். 4:
புதுச்சேரி ஏம்பலம் தொகுதிக்குட்பட்ட சேலியமேடு கவிஞரேறு வாணிதாசனார் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் சிமெண்ட் சாலை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏம்பலம் தொகுதி சுப்பையா நகர் கிளையின் ஆலோசனைக் கூட்டம் சந்திரா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கிளை சார்பில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் நலப் பணிகள் குறித்து செயலாளர் காயத்ரி பாலாஜி விரிவாக எடுத்துரைத்தார். சுமதி பிரியதாசன், விஜயகுமாரி உள்ளிட்ட நிர்வாகிகள் கிளை பணிகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தனர். ஏம்பலம் தொகுதி துணைச் செயலாளர் பக்தவச்சலம் கிளை அமைப்பின் செயல்பாடுகள் குறித்துப் பேசினார். தொகுதிச் செயலாளர் பெருமாள் சிறப்புரையாற்றி, பொதுமக்களின் அடிப்படைப் பிரச்னைகளைத் தீர்ப்பதில் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இக்கூட்டத்தில், சேலியமேடு கவிஞரேறு வாணிதாசனார் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் மாணவர்களின் நலன் கருதி உடனடியாக சிமெண்ட் சாலை அமைக்க வேண்டும், சுப்புலட்சுமி நகர் பகுதிக்கு புதிய தார் சாலை வசதி மற்றும் சீரான குடிநீர் பைப்லைன் இணைப்பு வழங்க வேண்டும், புதிய பேருந்து நிறுத்தம் அமைத்துத் தர வேண்டும் ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
மேலும், ஏரிக்கரைக்குச் செல்லும் பாதையை மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்துவிட வேண்டும், மயானத்திற்கு சுற்றுச்சுவர் எழுப்பி, தகனக் கொட்டகையைப் புதுப்பிக்க வேண்டும் என்றும், குடிமைப் பொருள் வழங்கல் துறை மூலம் வீடு வீடாக கள ஆய்வு (சர்வே) மேற்கொண்டு தகுதியுடைய அனைத்துக் குடும்பங்களுக்கும் உடனடியாக புதிய ரேஷன் கார்டுகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு முக்கியத் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
