தமிழ்நாடு

மதுராந்தகம் இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் பரந்தாமனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் – உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்!

மதுராந்தகம்:

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பணிகள் குறித்த தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு தேர்தல் களப்பணிகள் மற்றும் வியூகங்கள் குறித்து நிர்வாகிகளுக்கு விரிவான ஆலோசனைகளை வழங்கி உரையாற்றினார்.

கூட்டத்தில் பேசிய அவர், “மதுராந்தகம் தொகுதிக்கு இடைத்தேர்தல் திணிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் பரந்தாமனை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டிய பொறுப்பு இளைஞர் அணிக்கு உள்ளது. கடந்த நான்கு மாத ஆளுங்கட்சி ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ள விதம் குறித்தும், தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மதுராந்தகத்தில் உள்ள 286 வாக்குச்சாவடிகளையும் முழுமையாகக் கண்காணித்து வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.

மேலும், தேர்தல் பணிகளுக்காக 5 மாநில துணைச் செயலாளர்கள் மற்றும் 70 இளம்பேச்சாளர்கள் தீவிரக் களப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், களப்பணியோடு இணைந்து சமூக வலைதளங்களிலும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்த இடைத்தேர்தல் வெற்றி, தமிழக அரசியலில் மாற்றத்திற்கான தொடக்கமாக அமையும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன