காரைக்கால் திருப்பட்டினத்தில் சூரிய மின்சார விழிப்புணர்வு முகாம்: அரசு மானியம் பெற எம்.எல்.ஏ மீனாட்சிசுந்தரம் அழைப்பு!

காரைக்கால்: புதுச்சேரி மின்சாரத் துறையின் சார்பில் காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினத்தில் ‘சேவா சங்கல்ப் அபியான்’ இயக்கத்தின் கீழ், சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பதன் அவசியம் மற்றும் அரசு நலத்திட்டங்கள் குறித்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பசுமை ஆற்றலை ஊக்குவித்து மக்களின் மின்கட்டணச் செலவைக் குறைக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில் அப்பகுதி மக்கள் பெருமளவில் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் நிரவி–திருப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் கலந்துகொண்டு விழிப்புணர்வுப் பணிகளை முன்னெடுத்தார். மேலும் புதுச்சேரி மின்சாரத் துறையின் இளநிலைப் பொறியாளர்கள் அனுராதா, எழிலரசன் மற்றும் சந்தோஷ் ஆகியோர் பங்கேற்று சூரிய மின்னாற்றல் திட்டங்கள் குறித்து தொழில்நுட்ப ரீதியான விளக்கங்களை வழங்கினர். வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களின் மேற்கூரைகளில் சூரிய மின் தகடுகளை அமைப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து கூட்டத்தில் விரிவாகப் பேசப்பட்டது.
இதன்மூலம் மாதாந்திர மின்சாரக் கட்டணத்தைச் சேமிக்க முடிவதுடன், இத்திட்டங்களை நிறுவுவதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் நேரடி மானியங்கள் மற்றும் இதர சலுகைகளைப் பெறுவதற்கான வழிமுறைகளும் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டன. பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மையான மற்றும் பசுமை எரிசக்தி தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்து, சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் கூடிய வளர்ச்சியை எட்டும் நோக்கில் சேவா சங்கல்ப் அபியான் மக்கள் சேவையாக முன்னெடுக்கப்படுகிறது. இயற்கை வளங்களைப் பாதுகாத்து வருங்காலத் தலைமுறைக்கு தூய்மையான சூழலை உருவாக்க அனைவரும் சோலார் திட்டங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று மின்சாரத் துறை அலுவலர்கள் கேட்டுக்கொண்டனர்.
இந்த முகாமில் கலந்துகொண்ட கிராம மக்கள் தங்கள் வீடுகளில் சோலார் தகடுகள் அமைப்பது தொடர்பான சந்தேகங்களைக் கேட்டு நிவர்த்தி செய்துகொண்டனர்.
📸 புகைப்படத் தொகுப்பு (Photo Gallery)


