காரைக்காலில் கடல் பாசி வளர்ப்பு திட்ட தொடக்க விழா: அக்வாக்ரி நிறுவனத்தின் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தல்!

காரைக்கால்: புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட காரைக்காலில் கடல் பாசி (Seaweed) வளர்ப்பு திட்டத்தின் தொடக்க விழா விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் மத்திய மீன்வளம் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் லலன் சிங் முன்னிலையில், முன்னணி நிறுவனமான அக்வாக்ரி பிராசஸிங் பிரைவேட் லிமிடெட் (Aquagri Processing Pvt Ltd) தனது மதிப்புக்கூட்டப்பட்ட கடல் பாசி தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தியது.
இந்த முக்கிய நிகழ்வில் மத்திய மீன்வளத்துறை செயலாளர் டாக்டர் அபிலக்ஷ் லிகி, இணைச் செயலாளர் சுரபி ராய் (IFS) மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். விழாவில், கடலோரப் பகுதிகளில் கடல் பாசி சாகுபடியை ஊக்குவிப்பது மற்றும் அதன் மூலம் கடலோரப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
மேலும், அக்வாக்ரி நிறுவனத்தின் சார்பில் காட்சிப்படுத்தப்பட்ட கடல் பாசி சார்ந்த பல்வேறு மதிப்புக்கூட்டப்பட்ட தயாரிப்புகள், விவசாயம் மற்றும் தொழில் பயன்பாடுகள் குறித்து மத்திய அமைச்சரிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இத்திட்டம் காரைக்கால் பகுதி மீனவர்கள் மற்றும் பெண்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்புகளையும் நிலையான வருமானத்தையும் ஈட்டித் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


