புதுச்சேரி

சென்டாக் 2-ஆம் கட்ட கலந்தாய்வு: பதிவு கட்டணம் மற்றும் முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது புதுச்சேரி அரசு

புதுச்சேரி, செப். 10: புதுச்சேரி சென்டாக் (CENTAC) மூலம் நடைபெறும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு குறித்த முக்கிய அறிவிப்புகள் மற்றும் விதிமுறைகளை சென்டாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் இரண்டிற்கும் விண்ணப்பிக்கும் புதுச்சேரி மாணவர்கள், நிர்வாக ஒதுக்கீட்டுக்கான பதிவு கட்டணமான ரூ.2 லட்சத்தை மட்டும் செலுத்தினால் போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கட்டணத்தை இணைய வங்கி (Net Banking) அல்லது NEFT/RTGS செலுத்துச்சீட்டு (Challan) மூலமாக சென்டாக் கணக்கிற்குச் செலுத்த வேண்டும். இரண்டாம் கட்ட கலந்தாய்வில் இடம் ஒதுக்கப்பட்டு சேர்ந்தால், இக்கட்டணம் கல்விக் கட்டணத்தில் சரிகட்டப்படும். இடம் கிடைக்காத மாணவர்களுக்கு கலந்தாய்வு முடிவில் கட்டணம் திரும்ப ஒப்படைக்கப்படும். ஆனால் இடம் ஒதுக்கப்பட்டு சேராவிட்டால் பதிவு கட்டணம் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், முதல் சுற்றில் சமர்ப்பிக்கப்பட்ட பாடப்பிரிவு விருப்பத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுவிட்டதால், இரண்டாம் சுற்றுக்கு புதிய விருப்பத்தேர்வுகளை மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். புதிய இடம் ஒதுக்கப்பட்டால் முதல் சுற்றில் சேர்ந்த இடம் தானாகவே ரத்து செய்யப்படும். RIVER வழிகாட்டுதலின்படி, B.V.Sc.& A.H. பாடப்பிரிவில் காலியாக உள்ள NRI இடங்களுக்கு NRI/OCI மாணவர்கள் மட்டுமே தகுதியுடையவர்கள். கூடுதல் விவரங்களுக்கு www.centacpuducherry.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம் என சென்டாக் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன