புதுச்சேரி சென்டாக்: நீட் மருத்துவப் படிப்புகளுக்கான ஸ்ட்ரே சுற்று சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு!

புதுச்சேரி, 21/10/2026: புதுச்சேரியில் இளங்கலை நீட் மருத்துவப் படிப்புகளுக்கான (UG NEET Medical Courses) காலியிடங்களை நிரப்பும் இறுதி ஸ்ட்ரே சுற்று (Stray Round) மாணவர் சேர்க்கை பதிவிற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்டாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக புதுச்சேரி உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் மத்திய கலந்தாய்வு சேர்க்கைக் குழு (CENTAC) ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், நீட் அடிப்படையிலான இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான ஸ்ட்ரே சுற்று பதிவுக் கட்டணம் செலுத்துதல் மற்றும் பதிவு செய்வதற்கான கடைசி தேதி அக்டோபர் 21 மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவர் சேர்க்கைப் பதிவுக்கு இனி எக்காரணத்தைக் கொண்டும் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது என்றும் திட்டவட்டமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தொடர்பான குறுஞ்செய்தி (SMS) அனைத்து விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்களுக்கும் தகவல் அறியும் பொருட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கூடுதல் தகவல்களைப் பெற மாணவர்கள் www.centacpuducherry.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம். ஏதேனும் சந்தேகங்கள் அல்லது புகார்கள் இருப்பின், மாணவர் உள்நுழைவுத் தளத்தில் (Login Dashboard) உள்ள ‘Grievances’ வசதி மூலம் தெரிவிக்கலாம் அல்லது 0413-2655570, 2655571 ஆகிய உதவி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என சென்டாக் ஒருங்கிணைப்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

