உருளையன்பேட்டை தொகுதியில் சாலை, நடைபாதை பணிகள்: பொதுப்பணித்துறையுடன் எம்எல்ஏ நேரு ஆலோசனை
உருளையன்பேட்டை தொகுதியில் சாலை, நடைபாதை, மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து, பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் வீரச்செல்வனுடன் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நேரு ஆலோசனை நடத்தினார். தலைமைப் பொறியாளர் அலுவலகத்தில் நடந்த இந்த ஆலோசனையில், தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய முக்கியப் பணிகளை எடுத்துரைத்த அவர், அவற்றை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார். காமராஜர் சாலை, புஸ்ஸி வீதி ஆகிய பகுதிகளில் நடைபாதைகள் அமைத்தல், திருவள்ளுவர் சாலையில் உள்ள ‘U’ வடிவ வாய்க்காலை ‘L’ வடிவில் மாற்றியமைத்தல், மறைமலை அடிகள் சாலையில் வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை அருகே புதிய சர்வீஸ் சாலை அமைத்தல் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் பள்ளிவாசல் வீதி, அம்மன் கோவில் வீதி, புதுநகர் மெயின் ரோடு, நேருநகர் மெயின் ரோடு, குபேர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளைச் சீரமைப்பது, முக்கிய வீதிகளில் புதிய சிமென்ட் சாலைகள் அமைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.