புதுச்சேரி

புதுச்சேரி – கடலூர் பறக்கும் பாலம் விரிவாக்கம்: முதல்வர் ரங்கசாமியின் கோரிக்கைக்கு 10 நாளில் ஒப்புதல் அளிக்க நிதின் கட்கரி உத்தரவு!

புதுச்சேரி: புதுச்சேரி – கடலூர் சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் மேம்பாலத்தை 13.30 கிலோமீட்டராக நீட்டிக்கவும், அதற்குத் தேவையான ரூ.1,500 கோடி நிதி உதவி அளிக்கவும் முதலமைச்சர் என். ரங்கசாமி விடுத்த கோரிக்கையை அடுத்த 10 நாட்களுக்குள் பரிசீலித்து ஒப்புதல் அளிக்குமாறு அதிகாரிகளுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உத்தரவிட்டுள்ளார்.

குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் சார்பில் இரண்டு நாட்கள் நடைபெற்ற ஆய்வுக் கருத்தரங்கில் புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் கலந்துகொண்டார். அப்போது, இக்கருத்தரங்கிற்குத் தலைமை வகித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி எழுதிய கோரிக்கைக் கடிதத்தை அவர் வழங்கினார். இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்க மத்திய அமைச்சர் நேரம் ஒதுக்கியதன் பேரில், இன்று மத்திய அமைச்சருடன் மல்லாடி கிருஷ்ணா ராவ் தீவிர ஆலோசனை நடத்தினார்.

இந்தச் சந்திப்புக்குப் பின்னர் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியிலிருந்து முள்ளோடை கடலூர் எல்லை வரையிலான 13.30 கிலோமீட்டர் நீளமுள்ள சாலையை 4 வழிச் சாலையாக மாற்றவும், அதில் 2.6 கிலோமீட்டர் தொலைவுக்கு மேம்பாலம் அமைத்திடவும் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் ஏற்கனவே ரூ.650 கோடியை ஒதுக்கியிருந்தது. ஆனால், வார இறுதி நாட்களில் புதுச்சேரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளாலும், உள்ளூர் வாகனப் பெருக்கத்தாலும் இச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மேம்பாலத்தின் நீளத்தை 2.6 கிலோமீட்டரிலிருந்து 13.30 கிலோமீட்டராக முழுமையாக நீட்டிக்க ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், ஏனாம் பிராந்தியத்தில் மீன்வளத்துறை அலுவலகத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் சாலையை மேம்படுத்த ரூ.12 கோடி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இக்கோரிக்கைகளை கவனமுடன் கேட்டறிந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, முதல்வர் ரங்கசாமியின் கோரிக்கைகளை அடுத்த 10 நாட்களுக்குள் பரிசீலனை செய்து ஒப்புதல் வழங்கிட துறைசார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரி நகர்ப் பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த காவல்துறை தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் கடலூர் மார்க்கத்தில் போக்குவரத்து சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன