புதுச்சேரியில் கல்லூரி மாணவனை முட்டிப்போட வைத்து சித்ரவதை: புகார் இன்றி கோரிமேடு போலீசார் அதிரடி விசாரணை!
புதுச்சேரி: புதுச்சேரியில் கல்லூரி மாணவர் ஒருவரை காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று முட்டிப்போட வைத்து சக மாணவர்கள் சரமாரியாகத் தாக்கிய கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர் தரப்பிலிருந்து இதுவரை எவ்விதப் புகாரும் அளிக்கப்படாத நிலையிலும், சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவின் அடிப்படையில் கோரிமேடு காவல்துறையினர் தாமாக முன்வந்து தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
புதுச்சேரி காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவர், வில்லியனூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். கல்லூரியில் மாணவர் குழுக்களிடையே தங்களில் யார் ஆதிக்கம் செலுத்துவது (யார் கெத்து) என்பது தொடர்பாகக் குழு மோதலும் போட்டாபோட்டியும் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த குறிப்பிட்ட மாணவரை இருசக்கர வாகனத்தில் சிலர் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு மதுபோதையில் இருந்த சக மாணவர்கள், அந்த மாணவரை ஆத்திரத்தில் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அத்துடன் அவரைத் தரையில் முட்டிப்போட வைத்து சித்ரவதை செய்துள்ளனர். இதனைத் தங்களது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்த அந்த கும்பல், தாங்கள்தான் கெத்து எனக் கூறி சக கல்லூரி மாணவர்களின் சமூக வலைதளக் குழுக்களுக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த அதிர்ச்சி வீடியோ கல்லூரி வட்டாரத்தில் மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வீடியோ காட்சிகள் பரவியதைத் தொடர்ந்து, கோரிமேடு காவல்துறையினர் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவரிடமிருந்து இதுவரை காவல் நிலையத்தில் எந்தவொரு புகாரும் வராத போதிலும், வீடியோ காட்சிகள் மற்றும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடியோவில் அடையாளம் காணப்பட்ட மாணவர்கள் அனைவரையும் நேரில் ஆஜர்படுத்தி விசாரணை நடத்தும் நடவடிக்கைகளில் போலீசார் இறங்கியுள்ளனர். மாணவர்கள் மத்தியில் வன்முறை கலாச்சாரத்தைத் தூண்டும் வகையில் செயல்பட்ட நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு விரைவில் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.