புதுச்சேரி

10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த காவலர்களின் பிள்ளைகளுக்கு டிஜிபி ஷாலினி சிங் பாராட்டு!

புதுச்சேரி: புதுச்சேரி காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகளின் பிள்ளைகளில், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு காவல்துறையின் இயக்குனர் (டிஜிபி) ஷாலினி சிங் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.

புதுச்சேரி காவல் தலைமையகத்தில் இதற்கான பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் குவித்து பள்ளிக்கும் காவல்துறை குடும்பத்திற்கும் பெருமை சேர்த்த மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோரான காவல்துறை அதிகாரிகளுடன் கலந்துகொண்டனர். சாதனை படைத்த மாணவர்களுக்கு டிஜிபி ஷாலினி சிங் பாராட்டுச் சான்றிதழ்களையும், ஊக்கப் பரிசுகளையும் வழங்கிக் கௌரவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய காவல்துறை இயக்குனர் ஷாலினி சிங், காவல்துறையினர் இரவு பகல் பாராமல் பொதுமக்களின் பாதுகாப்பிற்காகப் பணியாற்றி வரும் சூழலில், அவர்களின் குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் பிள்ளைகளின் இந்த கல்விச் சாதனையும் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்றார். மேலும், மாணவர்கள் தங்களின் உயர்கல்வியிலும் இதே அர்ப்பணிப்புடன் படித்து எதிர்காலத்தில் சிறந்த ஆளுமைகளாகவும் குடிமக்களாகவும் உருவாக வேண்டும் என்று வாழ்த்தினார்.

புதுச்சேரி காவல்துறை சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மையில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக, போக்குவரத்து முதுநிலை போலீஸ் கண்காணிப்பாளர் (SSP) திவ்யா தலைமையில் விதிமீறல்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு ஒழுங்குமுறை பேணப்பட்டு வரும் நிலையில், காவல்துறையினரின் குடும்ப நலன் மற்றும் அவர்களின் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலும் தலைமை முன்னுரிமை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இவ்விழாவில் புதுச்சேரி காவல்துறை உயர் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் சாதனை படைத்த மாணவர்களின் குடும்பத்தினர் பலர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன