புதுச்சேரி முழுவதும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துங்கள்: காங்கிரஸ் நிர்வாகி பிரதீஷ் இருதயராஜ் வலியுறுத்தல்
புதுச்சேரி, அக். 8: புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதும் பாரபட்சமின்றி தீவிரமான கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று புதுவை காங்கிரஸ் சித்தாந்தத் துறை தலைவர் பிரதீஷ் இருதயராஜ் அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், ஆளுங்கட்சியினர் மற்றும் அரசு அதிகாரிகள் பார்வையிடும் குறிப்பிட்ட முக்கியப் பகுதிகளில் மட்டுமே தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தகைய பாரபட்சத்தைக் கைவிட்டு கிராமங்கள், நகர்ப்புறங்கள், குடியிருப்பு பகுதிகள், சாலை ஓரங்கள், கழிவுநீர் வாய்க்கால்கள் மற்றும் காலி மனைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கொசு ஒழிப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் முன்னெடுக்க வேண்டும்.
குறிப்பாக பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், விளையாட்டு மைதானங்கள் போன்ற குழந்தைகள் கூடும் இடங்களில் கொசு மருந்து தெளித்தல் மற்றும் புகை அடித்தல் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். தற்போது அரசு மருத்துவமனைகளில் டெங்கு பாதிப்புடன் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில், வடகிழக்குப் பருவமழைக் காலம் தொடங்கவுள்ளதால் நிலைமை மேலும் மோசமடைய வாய்ப்புள்ளது. எனவே நோய்த்தொற்று தீவிரமடையும் வரை காத்திருக்காமல், முன்கூட்டியே விரிவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறை நடைமுறைப்படுத்த வேண்டும்.
மேலும், வரவிருக்கும் தசரா விடுமுறை காரணமாக புதுச்சேரிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை கணிசமாக உயரும். இதனால் கடற்கரை, சந்தைகள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் சுற்றுலாத் தலங்களில் தூய்மைப் பணிகளை வலுப்படுத்த வேண்டும். வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் நன்னீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது குறித்து மக்களிடையே தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், மக்களின் பொதுசுகாதாரத்தில் அரசு அலட்சியம் காட்டாமல் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
