முதுநிலை மருத்துவ கலந்தாய்வை காலதாமதமின்றி நடத்த வேண்டும்: மாணவர் பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தல்
புதுச்சேரி, அக். 8:
புதுச்சேரியில் முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை எவ்வித காலதாமதமும் இன்றி உரிய நேரத்தில் நடத்தி முடிக்க வேண்டும் என்று புதுவை மாநில மாணவர், பெற்றோர் நலச்சங்கம் துணைநிலை ஆளுநர் மற்றும் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக புதுவை மாநில மாணவர், பெற்றோர் நலச்சங்க தலைவர் வை.பாலா என்ற பாலசுப்பிரமணியன், துணைநிலை ஆளுநர் மற்றும் முதலமைச்சர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வை வரும் 12-ஆம் தேதி தொடங்க வேண்டும் என்று மருத்துவ கலந்தாய்வு கமிட்டி (MCC) அறிவுறுத்தியுள்ளது. எனவே, புதுச்சேரி சென்டாக் நிர்வாகம் அரசு மற்றும் தனியார் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான மருத்துவ இடப்பங்கீடு விவரங்களை உடனடியாக வெளியிட்டு மாணவர் சேர்க்கைப் பணிகளை தொடங்க வேண்டும்.
ஓய்வுபெற்ற நீதிபதி விமலா தலைமையிலான கட்டண நிர்ணயக் குழு ஏற்கெனவே மருத்துவ படிப்புகளுக்கான கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. எனவே, புதுச்சேரி சுகாதாரத்துறையும் சென்டாக் நிர்வாகமும் இனியும் காலதாமதம் செய்யாமல், அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் மருத்துவ கல்லூரி இடப்பங்கீடு விவரங்களை உடனடியாக அறிவித்து, முதுநிலை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பங்களை பெற்று குறிப்பிட்ட காலத்திற்குள் கலந்தாய்வை நடத்தி முடிக்க உத்தரவிட வேண்டும் என்று தனது மனுவில் அவர் வலியுறுத்தியுள்ளார்.
