புதுச்சேரி

புதுச்சேரி: தண்ணீர் பிடிப்பதில் தகராறு; பக்கத்து வீட்டுப் பெண்ணை எட்டி உதைத்துத் தாக்கிய நபர் மீது போலீஸ் வழக்கு!

புதுச்சேரி, அக். 08:

புதுச்சேரி அருகே தெருக் குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் பக்கத்து வீட்டுப் பெண்ணை காலால் எட்டி உதைத்துத் தாக்கிய நபரை திருபுவனை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

புதுவை கலிதீர்த்தாள்குப்பம் ஓம்சக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் (29). தனியார் நிறுவன ஊழியரான இவருக்கும், இவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் லட்சுமிநாராயணன் குடும்பத்தினருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் மற்றும் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 3-ஆம் தேதி அருண்குமாரின் மனைவி சித்ரா அப்பகுதியில் உள்ள பொதுத் தெரு குழாயில் தண்ணீர் பிடிப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த லட்சுமிநாராயணனின் மனைவி சுகந்தி, சித்ராவை தகாத வார்த்தைகளால் திட்டியதாகத் தெரிகிறது. மனைவியை அவதூறாகப் பேசியதை அறிந்த அருண்குமார், அதுகுறித்து நேரில் சென்று தட்டிக்கேட்டுள்ளார்.

அப்போது ஆத்திரமடைந்த லட்சுமிநாராயணன், அருண்குமாரின் மனைவி சித்ராவை காலால் எட்டி உதைத்தும், கைகளால் சரமாரியாகத் தாக்கியும் அராஜகத்தில் ஈடுபட்டார். இச்சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் தட்டிக்கேட்க முயன்றபோது, அவர்களையும் லட்சுமிநாராயணன் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், திருபுவனை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள லட்சுமிநாராயணனை தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன