புதுச்சேரி காந்தி வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல்: சாலையில் இறங்கி போக்குவரத்தை ஒழுங்குபடுத்திய எம்.எல்.ஏ. விக்னேஷ் கண்ணன்!
புதுச்சேரி: புதுச்சேரி நகரின் முக்கிய வர்த்தகப் பகுதியான காந்தி வீதியில் ஏற்பட்ட கடுமையான போக்குவரத்து நெரிசலைத் தொடர்ந்து, ராஜ்பவன் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ் கண்ணன் நேரடியாக களத்தில் இறங்கி போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நகரப் பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனப் பெருக்கம் காரணமாக பல்வேறு முக்கிய சாலைகளில் அடிக்கடி போக்குவரத்து ஸ்தம்பித்து வருகிறது. இந்நிலையில், காந்தி வீதி பகுதியில் வாகனங்கள் அடுத்தடுத்து அணிவகுத்து நின்றதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் உருவானது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் நீண்ட நேரம் சாலையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
அப்போது அந்த வழியாக வந்த ராஜ்பவன் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ் கண்ணன், பொதுமக்கள் படும் இன்னல்களைக் கண்டு உடனடியாக தனது வாகனத்திலிருந்து கீழே இறங்கினார். தொடர்ந்து காந்தி வீதி சந்திப்பில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நின்று, வாகனங்களை முறைப்படுத்தி போக்குவரத்தைச் சீரமைக்கும் பணியில் நேரடியாக ஈடுபட்டார். அவரது இந்த முன்னெடுப்பால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் சீரானது.
இதுகுறித்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ் கண்ணன், புதுச்சேரி நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படும் முக்கியமான வணிகப் பகுதிகள் மற்றும் சந்திப்புகளில் போதுமான காவல்துறையினரை உடனடியாக பணியில் அமர்த்த வேண்டும் என்றும், போக்குவரத்தை முறையாக ஒழுங்குபடுத்த அரசு மற்றும் காவல்துறை உரிய கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
முன்னதாக, புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் விதிமீறல்களைக் கட்டுப்படுத்தவும் போக்குவரத்து முதுநிலை போலீஸ் கண்காணிப்பாளர் (SSP) திவ்யா தலைமையிலான காவல்துறை பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், வர்த்தகப் பகுதிகளில் ஏற்படும் நெரிசலைத் தவிர்க்க கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை வாகன ஓட்டிகள் மத்தியில் தற்போது வலுத்துள்ளது.
