தாராபுரத்தில் திமுக வேட்பாளர் எஸ்.சுகன்யாவை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தீவிர வாக்குச்சேகரிப்பு!

தாராபுரம்: தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் தீவிர தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வரும் நிலையில், அலங்கியம் ஊராட்சியில் திமுக வேட்பாளர் எஸ். சுகன்யாவை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் திருமிகு. பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவருக்குக் கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சியினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழக தேர்தல் களத்தில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் எஸ். சுகன்யாவை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய அண்ணியார் திருமிகு. பிரேமலதா விஜயகாந்த் அலங்கியம் ஊராட்சிப் பகுதிக்கு வருகை தந்தார்.
அலங்கியம் பகுதிக்கு வருகை தந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களை, அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து மிகுந்த மரியாதையுடனும் உற்சாகத்துடனும் வரவேற்றனர்.
இதைத் தொடர்ந்து அப்பகுதியில் திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள் மத்தியில் திமுக வேட்பாளர் எஸ். சுகன்யாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கப்பட்டது. கழகத்தின் சாதனைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துரைத்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இந்த தேர்தல் பரப்புரை நிகழ்வில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த ஏராளமான தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு பிரச்சார களத்தை உற்சாகப்படுத்தினர்.



