தமிழ்நாடு

இடைத்தேர்தலைத் திணித்தவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்: மதுராந்தகத்தில் கனிமொழி எம்.பி. தீவிர வாக்குச் சேகரிப்பு!

மதுராந்தகம்: மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி தீவிர தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட சரவம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளில் கழகத்தின் வேட்பாளர் பரந்தாமன் இந்திரன் அவர்களை ஆதரித்து அவர் பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார். பிரச்சார வாகனத்தில் நின்றபடி மக்களிடையே உரையாற்றிய அவர், திமுக அரசின் சாதனைகளையும் தேர்தல் வாக்குறுதிகளையும் எடுத்துரைத்து ஆதரவு திரட்டினார்.

பிரச்சாரத்தின் போது பேசிய கனிமொழி எம்.பி., “தூய சக்தி என்று தங்களைத் தாங்களே தம்பட்டம் அடித்துக் கொண்டு, பிற கட்சிகளிலிருந்து சட்டமன்ற உறுப்பினர்களைத் திருடி, தேவையின்றி மக்கள் மீது இடைத்தேர்தலைத் திணித்திருக்கும் திருட்டு சக்திகளுக்கு இந்த தேர்தலில் மக்கள் நிச்சயம் படுதோல்வியைப் பரிசளிப்பார்கள். அத்தகைய விரக்தியடைந்த சக்திகளுக்குத் தகுந்த பாடம் புகட்ட மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் தயாராக இருக்கிறார்கள்” என்று கடுமையாகச் சாடினார்.

மேலும், பொதுமக்கள் திமுக வேட்பாளருக்குப் பெருவாரியான வாக்குகளை அளித்து மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இப்பிரச்சார நிகழ்வில் மாவட்ட, ஒன்றிய, நகர திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சியின் முக்கிய பிரமுகர்கள், தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன