தமிழ்நாடு

காரின் மேற்கூரையில் 40 கி.மீ பயணித்து குட்கா கும்பலை பிடித்த தலைமை காவலர்: அரசு விருது வழங்கி கவுரவிக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னை:
காரின் மேற்கூரை மீது படுத்தவாறு 40 கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று குட்கா கடத்தல் கும்பலை துணிச்சலுடன் மடக்கிப் பிடித்த கோவை தலைமை காவலர் வேல்முருகனுக்கு தமிழக அரசு விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

கோவை மாவட்டம், விளாங்குறிச்சி பகுதியில் சட்டவிரோதமாக காரில் குட்கா கடத்திச் செல்லப்படுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட கோவில்பாளையம் காவல் நிலைய தலைமை காவலர் வேல்முருகன், குட்கா ஏற்றி வந்த காரை நிறுத்த முயன்றார். ஆனால் கடத்தல் கும்பல் காரை நிறுத்தாமல் வேகமாக இயக்கியுள்ளது. உடனடியாக சுதாரித்துக் கொண்ட தலைமை காவலர் வேல்முருகன், காரின் மேற்கூரை மீது துணிச்சலாகப் பாய்ந்து ஏறிக்கொண்டார்.

தொடர்ந்து காரின் கூரை மீது படுத்தபடியே சுமார் 40 கிலோமீட்டர் தூரம் பயணித்த அவர், கடத்தல் கும்பலை விடாமல் துரத்திப் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தினார். அவரது இந்த அசாத்திய துணிச்சலும், கடமை உணர்வும் பொதுமக்களிடையேயும் சக காவலர்களிடையேயும் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காரின் மேற்கூரை மீது பாய்ந்து படுத்தபடியே 40 கி.மீ தொலைவுக்கு துரத்திச் சென்று குட்கா கும்பலை பிடித்த கோவில்பாளையம் காவல் நிலைய தலைமை காவலர் வேல்முருகனின் துணிச்சலும், கடமை உணர்வும் அளப்பரியது. சொந்த உயிரை துச்சமென மதித்து கடமையாற்றிய காவலர் வேல்முருகன் குற்றங்களையும், போதைப்பொருள் கடத்தல்களையும் தடுப்பதில் மற்ற காவலர்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக மாறியிருக்கிறார்.”

“அவரது இந்த தன்னலமற்ற தீரச் செயலையும், அர்ப்பணிப்புமிக்க கடமை உணர்வையும் அங்கீகரிக்கும் வகையில் தலைமை காவலர் வேல்முருகனுக்கு தமிழக அரசு முறைப்படி விருது வழங்கி கௌரவிக்க வேண்டும்” என அன்புமணி ராமதாஸ் தனது வாழ்த்துகளுடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன