புதுச்சேரி

புதுச்சேரி தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ESI விலக்கு அளிக்க வேண்டும்: அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவிடம் சங்கத்தினர் மனு!

புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்குத் தொழிலாளர் அரசு காப்பீட்டுத் திட்டத்தில் (ESI) இருந்து முழுமையாக விலக்கு அளிக்கக் கோரி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவிடம் ஒருங்கிணைந்த தனியார் பள்ளி சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள அமைச்சர் அலுவலகத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது. புதுச்சேரி ஒருங்கிணைந்த தனியார் பள்ளி சங்கத்தின் தலைவர் ரமேஷ் தலைமையில் சங்க நிர்வாகிகள் அமைச்சரை நேரில் சந்தித்துப் பேசினர். அப்போது தனியார் பள்ளி நிர்வாகங்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்ந்த பல்வேறு முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை அமைச்சரிடம் முறைப்படி சமர்ப்பித்தனர்.

அந்த மனுவில், புதுச்சேரியில் இயங்கி வரும் தனியார் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு தற்போதுள்ள ESI விதிமுறைகள் காரணமாக பல்வேறு நிர்வாக ரீதியான மற்றும் நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படுகின்றன என்றும், எனவே தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ESI காப்பீட்டுத் திட்ட விதிகளிலிருந்து விலக்கு அளிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

மேலும், தனியார் பள்ளி ஆசிரியர்கள் சந்தித்து வரும் அன்றாடப் பிரச்சினைகள், பணிப் பாதுகாப்பு மற்றும் அவர்களின் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் சங்க நிர்வாகிகள் அமைச்சரிடம் விரிவாக எடுத்துரைத்தனர்.

சங்க நிர்வாகிகளின் அனைத்துக் கோரிக்கைகளையும் கேட்டறிந்த அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், ஆசிரியர்களின் நலன் சார்ந்த இந்த கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன