புதுச்சேரி

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: வெளிமாவட்ட அரசியல் தலைவர்களை வெளியேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

புதுச்சேரி, செப். 27:

புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு முகாமிட்டுள்ள அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த வெளி அரசியல் தலைவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ) மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளரும், தட்டாஞ்சாவடி தொகுதி வேட்பாளருமான ஏ.எம். சலீம், மாவட்ட ஆட்சியரிடம் விரிவான புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாகப் பிரச்சாரம் மேற்கொள்வதாகக் கூறிக்கொண்டு, தமிழகத்தின் அண்டை மாவட்டங்களான விழுப்புரம் மற்றும் கடலூரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், இந்நாள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் தொகுதியில் தொடர்ந்து முகாமிட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொகுதியில் முகாமிட்டுள்ள வெளி ஆட்கள் வழக்கமான தேர்தல் பணிகளைத் தாண்டி, வாக்காளர்களை மிரட்டும் வகையிலும், பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதாகத் தகவல்கள் வருகின்றன என்று மனுவில் ஏ.எம். சலீம் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இவர்களின் தேவையற்ற நடமாட்டத்தால் தொகுதி பொதுமக்களுக்கும் இயல்பு வாழ்க்கைக்கும் பெரும் இடையூறு ஏற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தேர்தல் நேர்மையாகவும் நியாயமாகவும் நடைபெறுவதை உறுதிசெய்யும் பொருட்டு, தட்டாஞ்சாவடி தொகுதியில் முகாமிட்டுள்ள வெளி மாவட்டங்களைச் சேர்ந்த அரசியல்வாதிகளை உடனடியாக அங்கிருந்து வெளியேற்ற மாவட்ட நிர்வாகமும் தேர்தல் ஆணையமும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றுத் தலைவரும் தியாகியுமான வ. சுப்பையாவின் திருவுருவப் படத்தை, திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தங்களது தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்துவதற்கு சி.பி.ஐ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மாற்று அரசியல் கொள்கை கொண்ட கட்சிகள் தங்களது ஆதாயத்திற்காக கம்யூனிச இயக்கத் தலைவரின் புகைப்படத்தைப் பயன்படுத்துவது அரசியல் நெறிமுறைகளுக்கு எதிரானது என்றும், இதனை உடனடியாகத் தடுத்து நிறுத்த மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன