புதுச்சேரி வில்லியனூரில் பயங்கரம்: பேச மறுத்த இளம் செவிலியர் கத்தியால் வெட்டிக் கொலை!
புதுச்சேரி வில்லியனூர் அருகே பேச மறுத்த தனியார் மருத்துவமனை இளம் பெண் செவிலியர் ஒருவர் கத்தியால் வெட்டிக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வில்லியனூர் கோபாலன் கடை பகுதியைச் சேர்ந்த தனுஷ்கோடி என்பவரின் மகள் ஜெயஸ்ரீ (22). நர்சிங் படிப்பை முடித்த இவர், நெல்லித்தோப்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்தார். ஜெயஸ்ரீக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கலைக்குமார் (எ) குமார் என்பவருக்கும் இடையே ஆரம்பத்தில் பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கலைக்குமார் பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கி சிறை சென்றவர் என்ற விபரம் ஜெயஸ்ரீக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவருடன் பேசுவதைத் தவிர்த்து பழகுவதை ஜெயஸ்ரீ முற்றிலுமாக நிறுத்திவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த கலைக்குமார், பேச மறுத்த ஜெயஸ்ரீயை கத்தியால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.