புதுச்சேரி

புதுச்சேரியில் ‘தூய்மை திருவிழா’: விழிப்புணர்வு கோலப்போட்டி உற்சாகம்!

புதுச்சேரி, செப்.26:
மத்திய அரசின் ஸ்வச் பாரத் திட்டத்தின் ஒரு அங்கமாக நாடு முழுவதும் தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாகப் புதுச்சேரியில் ‘தூய்மை திருவிழா-2026’ கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதி தொடங்கி வரும் அக்டோபர் 17-ஆம் தேதி வரை ஒரு மாத காலம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, பொதுமக்களிடையே தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புதுச்சேரி கம்பன் கலையரங்கில் ‘தூய்மையான புதுவை’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு கோலப்போட்டி நடைபெற்றது. உள்ளாட்சித்துறை இயக்குநர் ஆதர்ஷ் தலைமை தாங்கி போட்டிகளைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் ஸ்ரீஜித், சுகாதார அதிகாரி ஆர்த்தி, உதவி திட்ட அதிகாரி வெங்கடாசலபதி, உதவிப் பொறியாளர் யுவராஜ், இளநிலைப் பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட நகராட்சி ஊழியர்கள் திரளாகக் கலந்து கொண்டு தூய்மை இந்தியா திட்ட உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

இப்போட்டியில் பாரதிதாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் 50 பேரும், நகராட்சிப் பணியாளர்கள் 50 பேரும் ஆர்வத்துடன் பங்கேற்று தூய்மையை வலியுறுத்தும் வண்ணக் கோலங்களை வரைந்தனர். போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவிகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இக்கோலப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000, இரண்டாம் பரிசாக ரூ.3,000 மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.2,000 அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பரிசுகள் வரும் அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று கம்பன் கலையரங்கில் நடைபெறவுள்ள தூய்மை திருவிழா நிறைவு நிகழ்ச்சியில் வழங்கப்பட உள்ளன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன