புதுச்சேரியில் முழுநிலவு நாள்: தொல்காப்பியர் சிலைக்கு தமிழ்ச் சான்றோர் பேரவை மாலை அணிவித்து மரியாதை!

புதுச்சேரி: புதுச்சேரி இலாசுப்பேட்டையில் அமைந்துள்ள மொழியியல் மற்றும் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் உள்ள தொல்காப்பியர் சிலைக்கு, புதுவை தமிழ்ச் சான்றோர் பேரவை சார்பில் மாலை அணிவித்து சிறப்பு மரியாதை செலுத்தப்பட்டது.
பழம்பெரும் தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தை இயற்றிய தொல்காப்பியரின் பெருமையை போற்றும் வகையில், மாதந்தோறும் முழுநிலவு நாளையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து சிறப்புச் சிற்றுரை நிகழ்த்தும் வழக்கம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இம்மாத பவுர்ணமியை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு புதுவை தமிழ்ச் சான்றோர் பேரவையின் தலைவர் கலைமாமணி முனைவர் நெய்தல் நாடன் தலைமை வகித்தார்.
இந்நிகழ்வில் தமிழ் மாமணி முனைவர் சு.வேல்முருகன், புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் சீனு மோகன்தாசு, பேரவையின் பொருளாளர் கலைமாமணி பொறியாளர் மு.பாலசுப்பிரமணியன், துணைத் தலைவர் ப.திருநாவுக்கரசு, சாகித்திய அகாதமி பொதுக்குழு உறுப்பினர் கலைமாமணி பூபதி பெரியசாமி, கவிஞர் வேணு. ஞானமூர்த்தி, கவி ஞாயிறு முருகு மணி மற்றும் ஆசிரியர் சிவராமன் உள்ளிட்ட தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள் திரளாகப் பங்கேற்று தொல்காப்பியரின் சிலைக்கு மரியாதை செலுத்தி சிறப்பித்தனர்.



