நீலகிரி: தென்னிந்திய தேயிலை ஆராய்ச்சி அறக்கட்டளை நூற்றாண்டு மாநாட்டில் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்புரை!

நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடைபெற்ற தென்னிந்திய தேயிலை தோட்ட உரிமையாளர்கள் சங்க தேயிலை ஆராய்ச்சி அறக்கட்டளையின் நூற்றாண்டு மாநாட்டில் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். இம்மாநாட்டில் மாண்புமிகு திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நூற்றாண்டு விழாவில் தேயிலைத் தொழில் துறை சார்ந்த பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் பெருமளவில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பில் தேயிலைத் தோட்டத் தொழில் பெரும் பங்கு வகிப்பதாகக் குறிப்பிட்டார். குறிப்பாக சர்வதேச அளவில் இந்தியத் தேயிலையின் தரத்தை உயர்த்தவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் நவீன ஆராய்ச்சி மற்றும் புதிய தொழில்நுட்பங்களின் பயன்பாடு இன்றியமையாதது என வலியுறுத்தினார்.
மேலும், கடந்த நூறு ஆண்டுகளாகத் தேயிலை விவசாயிகளின் மேம்பாட்டிற்காகவும், தரமான தேயிலை உற்பத்திக்காகவும் தென்னிந்திய தேயிலை ஆராய்ச்சி அறக்கட்டளை ஆற்றிவரும் மகத்தான பணிகளையும் சாதனைகளையும் அவர் வெகுவாகப் பாராட்டினார். இம்மாநாட்டில் தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள், விஞ்ஞானிகள், வேளாண் வல்லுநர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
