புதுச்சேரி

பிள்ளையார்குப்பம் மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்குக: புதுச்சேரி ஆட்சியரிடம் விசிக மனு!

புதுச்சேரி: ஏம்பலம் தொகுதிக்குட்பட்ட பிள்ளையார்குப்பம் பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகளால் பாதிக்கப்படும் ஏழை எளிய மக்களுக்கு உடனடியாக இலவச மனைப்பட்டா வழங்கி மாற்று இடம் அளிக்கக் கோரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனு அளிக்கப்பட்டது.

புதுச்சேரி மாநிலம் ஏம்பலம் தொகுதி பிள்ளையார்குப்பம் பகுதியில் சாலை ஓரமாகப் பல ஆண்டுகளாக ஏழை எளிய மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் நடைபெறவுள்ள சாலை விரிவாக்கப் பணிகளைக் காரணம் காட்டி, அங்கு வசிக்கும் மக்களின் வீடுகளைக் காலி செய்யுமாறு அரசு அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். இதனால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அப்பகுதி மக்கள், விசிக தலைமை நிர்வாகிகளைச் சந்தித்து தங்களுக்கு மாற்று இடம் பெற்றுத் தருமாறு முறையிட்டனர்.

இதையடுத்து, விசிக முதன்மைச் செயலாளர் அரிமாதமிழன் தலைமையில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சாலை விரிவாக்கத்தால் வீடுகளை இழக்கும் ஏழை குடும்பங்களுக்கு அரசு சார்பில் உடனடியாக இலவச மனைப்பட்டா வழங்கி மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் விசிக அமைப்புச் செயலாளர் ஆதவன், தலைமை நிலையச் செயலாளர் அகன், மாநிலச் செயலாளர் ஏகாம்பரம், தலைமைப் பொறுப்பாளர்கள் செழியன், சரவணன் மற்றும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன