காலாப்பட்டு அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் அடிப்படை வசதிகள் கோரி எம்.எல்.ஏ. விக்னேஸ்வரன் நேரில் ஆய்வு!
புதுச்சேரி, செப். 20: புதுச்சேரி காலாப்பட்டில் இயங்கி வரும் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் தங்கி சட்டப் படிப்புகளைப் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், இக்கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கான விடுதி மற்றும் உணவகக் (கேண்டீன்) கட்டிடங்கள் ஏற்கனவே தயாராக உள்ள போதிலும், கொரோனா தொற்று காலத்திற்குப் பிறகு அவை முழுமையாகச் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படவில்லை என காரைக்கால் மாணவர்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து நெடுங்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா / விக்னேஸ்வரனிடம் காரைக்கால் பகுதி மாணவர்கள் முறையிட்டுப் புகார் அளித்தனர்.
மாணவர்களின் புகாரைத் தொடர்ந்து, நெடுங்காடு தொகுதி எம்.எல்.ஏ. விக்னேஸ்வரன் காலாப்பட்டு அம்பேத்கர் சட்டக் கல்லூரிக்கு நேரில் சென்று பார்வையிட்டு விரிவான ஆய்வு மேற்கொண்டார். அப்போது கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதி மற்றும் கேண்டீன் வசதிகளை உடனடியாக மாணவர்கள் பயன்பாட்டிற்குத் திறந்துவிட வேண்டும் என்றும், மாணவர்கள் தடையின்றி கல்வி பயிலத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் துரிதமாகச் செய்து தர வேண்டும் என்றும் கல்லூரி முதல்வரிடம் வலியுறுத்தினார்.
மேலும், காரைக்கால் மற்றும் புதுச்சேரி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, சட்டக் கல்லூரியில் அனுமதிக்கப்படும் மாணவர் சேர்க்கை இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின்போது கல்லூரி முதல்வர், விரிவுரையாளர் அன்பரசு மற்றும் மாணவ, மாணவிகள் உடனிருந்தனர்.
