புதுச்சேரி மோதிலால் நேரு கல்லூரியில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்: 100 என்சிசி மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு!

புதுச்சேரி: புதுச்சேரி மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தேசிய புகையிலைக் கட்டுப்பாட்டுத் திட்டம் (NTCP) சார்பில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. புதுச்சேரி என்.சி.சி குழுமத் தலைமையகம் இணைந்து முன்னெடுத்த இந்நிகழ்வில் கல்லூரி என்.சி.சி பிரிவைச் சேர்ந்த 100 மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் தொடக்கமாக போதைப் பொருள் இல்லாத பாரதத்தை உருவாக்கும் நோக்கில் மாணவர்கள் ‘நஷா முக்த் பாரத் அபியான்’ (NMBA) விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற விழிப்புணர்வுக் கருத்தரங்கில், தேசிய புகையிலைக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் மாநில ஆலோசகர் டாக்டர் ஆர். சூர்ய குமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர், புகையிலைப் பயன்பாட்டினால் மனித உடலுக்கு ஏற்படும் தீவிர பாதிப்புகள், புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்களின் தாக்கம் மற்றும் புகையிலை இல்லாத ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவம் குறித்து விரிவான விளக்கம் அளித்தார்.
மேலும், இளைஞர்கள் தாங்கள் புகையிலைப் பழக்கத்திலிருந்து விலகி இருப்பதுடன், குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களிடையே புகையிலை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை தீவிரமாக ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

