ஆயுஷ் மருத்துவ படிப்புகளுக்கான வரைவு தரவரிசைப் பட்டியல் வெளியீடு: சென்டாக் நிர்வாகம் அறிவிப்பு
புதுச்சேரி, செப். 10: புதுச்சேரியில் சித்தா, ஹோமியோபதி மற்றும் யுனானி உள்ளிட்ட ஆயுஷ் மருத்துவ படிப்புகளுக்கான வரைவு தரவரிசைப் பட்டியலை சென்டாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தயார் செய்யப்பட்டுள்ள இந்த வரைவுப் பட்டியல் தற்போது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள இந்த வரைவு தரவரிசைப் பட்டியலில் ஏதேனும் ஆட்சேபனைகள் அல்லது திருத்தங்கள் இருப்பின், மாணவர்கள் நாளை (செப். 11) மதியம் 1:00 மணிக்குள் centacugneet@dhtepdy.edu.in என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாக தங்களது கோரிக்கைகளைத் தெரிவிக்கலாம். பெறப்படும் ஆட்சேபனைகள் முறையாகப் பரிசீலிக்கப்பட்ட பின்னர் இறுதித் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஆயுஷ் படிப்புகளுக்கான நேரடி கலந்தாய்வு வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி காலை 11:30 மணிக்கு புதுவை காமராஜர் மணிமண்டப வளாகத்தில் இயங்கி வரும் சென்டாக் தலைமை அலுவலகத்தில் நடைபெறும். இதில் தமிழ்நாடு பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் 2 இடங்கள், மதுரை திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் 1 இடம், கர்நாடகா பெங்களூரு அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் 1 இடம் மற்றும் சென்னை அரசு யுனானி மருத்துவக் கல்லூரியில் 1 இடம் என மொத்தம் உள்ள இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இக்கலந்தாய்வில் பங்கேற்று இட ஒதுக்கீடு பெறும் மாணவர்கள், சென்டாக் நடத்தும் அடுத்தகட்ட நீட் மற்றும் நீட் அல்லாத பிற படிப்புகளுக்கான கலந்தாய்வுகளில் பங்கேற்க இயலாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்விற்கு வரும் மாணவ-மாணவியர் தங்களது அசல் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்கள், நீட் தேர்வு மதிப்பெண் அட்டை மற்றும் புதுப்பிக்கப்பட்ட இருப்பிடச் சான்றிதழ் ஆகியவற்றுடன் நேரில் ஆஜராக வேண்டும். கூடுதல் விவரங்களை அறிய 0413-2655570, 2655571 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.
