புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற தொடர் முயற்சிகள் அவசியம்: பேராசிரியர் மு.ராமதாஸ் வலியுறுத்தல்!
புதுச்சேரி, செப். 8: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்காக வெறும் உணர்ச்சிப்பூர்வமான பேச்சுக்களைத் தவிர்த்து, ஆதாரப்பூர்வமான விரிவான அறிக்கையைத் தயாரித்து மத்திய அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று புதுவை மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் பேராசிரியர் மு.ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுச்சேரி சட்டப்பேரவையில் மாநில அந்தஸ்து பெறுவதை வலியுறுத்தி விவாதம் நடைபெற்றிருப்பது வரவேற்கத்தக்கதாகும். முதலமைச்சரும் சில சட்டப்பேரவை உறுப்பினர்களும் மாநில அந்தஸ்து பெறுவதற்காக தங்களது பதவிகளை ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக உணர்ச்சிவசப்பட்டு பேசியுள்ளனர். தேர்தல் நெருங்கும் தருணங்களில் இதுபோன்று பேசுவது வழக்கமாகிவிட்டது. ஆனால், அதற்கான ஆக்கப்பூர்வமான வலுவான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படுவதில்லை” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், “மாநில அந்தஸ்து கோரிக்கையை வலுவாகவும், திட்டமிட்ட முறையிலும் மத்திய அரசின் முன் வைக்க புதுவை அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும். வெறும் அரசியல் அறிக்கைகளை வெளியிடுவதை விடுத்து, அரசியலமைப்பு நிபுணர்கள், பொருளாதார வல்லுநர்கள், சட்ட வல்லுநர்கள் மற்றும் முன்னாள் நிர்வாக அதிகாரிகள் அடங்கிய சிறப்பு நிபுணர் குழுவை அரசு உடனடியாக அமைக்க வேண்டும். இக்குழு மூலம் புதுவைக்கு மாநில அந்தஸ்து ஏன் தேவை என்பதை விளக்கும் விரிவான ஆவண அறிக்கையைத் தயாரிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு தயாரிக்கப்படும் அறிக்கையை பிரதமர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சரிடம் முறைப்படி சமர்ப்பித்து, அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப தொடர் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் பேராசிரியர் ராமதாஸ் தனது அறிக்கையில் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.