தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம் – மும்முனை போட்டியில் களம் சூடுபிடிக்கிறது!
புதுச்சேரி, 8/9/2026: புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (செப். 9) துவங்கவுள்ள நிலையில், தேர்தல் களம் மும்முனை போட்டியாக தீவிரமடைந்துள்ளது.
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் முதலமைச்சர் என்.ரங்கசாமி தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் தனது தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்ததையடுத்து அத்தொகுதி காலியானது. தற்போது இந்திய தேர்தல் ஆணையம் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாளை தொடங்கும் வேட்புமனு தாக்கல் வரும் செப்டம்பர் 16-ஆம் தேதி வரை நடைபெறும். மனுக்கள் பரிசீலனை செப்டம்பர் 17-ஆம் தேதியும், மனுக்களை திரும்பப் பெற செப்டம்பர் 19 கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, அக்டோபர் 9-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மாதிரி தேர்தல் நடத்தை விதிமுறைகள் தட்டாஞ்சாவடி தொகுதியில் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. தட்டாஞ்சாவடி ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் அலுவலகத்தில் வேட்புமனுக்கள் பெறப்படவுள்ளன. தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள் எந்தவொரு அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது என்றும், மீறினால் பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 223-ன் கீழ் குற்றவியல் நடவடிக்கை பாயும் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி ரவிப்பிரகாஷ் எச்சரித்துள்ளார்.
இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி மற்றும் தி.மு.க. இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் அசோக் ஆனந்த் வேட்பாளராக முதலமைச்சர் ரங்கசாமியால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கூட்டணி சார்பில் நேயம் மக்கள் கழகத்தைச் சேர்ந்த விநாயகம் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில் தி.மு.க. தனித்து களமிறங்கி தட்டாஞ்சாவடியைச் சேர்ந்த சேதுசெல்வத்தை வேட்பாளராக நிறுத்த தீவிர ஆலோசனைகள் நடத்தி வருகிறது.