புகழ்பெற்ற புல்பிரைட்-நேரு சர்வதேச உதவித்தொகை: புதுச்சேரி பல்கலைக்கழக பேராசிரியர் பரணி காந்திற்கு துணைவேந்தர் வாழ்த்து!
புதுச்சேரி: அமெரிக்கா – இந்தியா கல்வி அறக்கட்டளை (USIEF) சார்பில் வழங்கப்படும் 2026-27-ஆம் ஆண்டிற்கான புகழ்பெற்ற ‘புல்பிரைட்-நேரு கல்வி மற்றும் தொழில்முறை சிறப்பு உதவித்தொகைக்கு’ (FNAPE) புதுச்சேரி பல்கலைக்கழகப் பேராசிரியர் பரணி காந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச அளவில் பல்கலைக்கழகத்திற்குப் பெருமை சேர்த்த அவருக்கு, பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் பிரகாஷ் பாபு நேரில் பாராட்டு மற்றும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்தியக் கல்வியாளர்களுக்குக் கிடைக்கக்கூடிய சர்வதேச அளவிலான மிகவும் மதிப்புமிக்க மற்றும் கடுமையான போட்டித்தன்மை கொண்ட அங்கீகாரங்களில் இந்த புல்பிரைட்-நேரு உதவித்தொகை முதன்மையானதாகும். இந்த உயர் கௌரவத்தின் மூலம் பேராசிரியர் பரணி காந்த், அமெரிக்காவின் முன்னணி கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு நேரடியாகச் சென்று அதிநவீன மேம்பட்ட உயர் ஆராய்ச்சிகளை முன்னெடுக்கும் அரிய வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் ஆராய்ச்சித் தரத்தை சர்வதேச அரங்கில் உயர்த்தியுள்ள பேராசிரியரின் இந்த சாதனைக்குப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் எனப் பலரும் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

