தாய் வழி சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி கலெக்டர் உருவபொம்மையுடன் பாடை கட்டி போராட்டம்: பெரியார் சிந்தனையாளர் இயக்கத்தினர் கைது!
புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தாய் வழி அடிப்படையில் சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரியும், இது தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தியும் பெரியார் சிந்தனையாளர் இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியரின் உருவப் பொம்மையுடன் பாடை கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் வசிக்கும் மக்களுக்கு தாய் வழியிலும் சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இருப்பினும், இந்த உத்தரவை அமல்படுத்துவதில் வருவாய்த்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து காலதாமதம் செய்து வருவதாகப் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர். இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரின் உருவப் பொம்மையைப் பாடையில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்று தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்கள், நீதிமன்ற உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து, அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இச்சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


