ஆதிதிராவிடர் நலத்துறை முக்கிய அறிவிப்புகள்: மனை வாங்க ரூ.10 லட்சம் மானியம், ஐஏஎஸ் பயிற்சிக்கு நிதி – அமைச்சர் ராஜவேலு!

புதுச்சேரி, ஆக. 31: புதுச்சேரி மாநிலத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம், கல்வி மற்றும் சமூக மேம்பாட்டிற்காக பல்வேறு புதிய திட்டங்களை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜவேலு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்த புதிய அறிவிப்புகளின்படி, ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் சொந்தமாக வீட்டு மனை வாங்குவதற்கு அரசு சார்பில் ரூ.10 லட்சம் மானியமாக வழங்கப்படும். மேலும், மத்திய அரசுப் பணிகளுக்கான குடிமைப் பணித் தேர்வுகளில் புதுச்சேரி மாணவர்கள் சாதிக்கும் வகையில், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் தேர்வுப் பயிற்சிகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு ரூ.1.90 லட்சம் பயிற்சி உதவித்தொகையாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றுடன் ஆதிதிராவிடர் பகுதிகளில் அமைந்துள்ள கோயில்களைப் புனரமைத்து திருப்பணிகள் மேற்கொள்ள தலா ரூ.10 லட்சம் நிதி வழங்கப்படும். வன்கொடுமைத் தாக்குதல்களால் உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும், பாரதியார் பல்கலைக்கூடத்தின் காலிப்பணியிடங்கள் விரைந்து நிரப்பப்படும் என்றும் அமைச்சர் ராஜவேலு தெரிவித்துள்ளார்.
