சென்டாக் அலுவலக கட்டடத்தில் ஏறி மாணவர்கள், பெற்றோர் திடீர் போராட்டம்: புதுச்சேரியில் பரபரப்பு!
புதுச்சேரி: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி சென்டாக் மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு வழங்கக்கோரி, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சென்டாக் அலுவலக கட்டடத்தின் மீது ஏறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியில் எஸ்.சி., எஸ்.டி., எம்.பி.சி. மற்றும் ஓ.பி.சி. உள்ளிட்ட பிரிவினருக்கு ‘பூர்வீகம்’ (Natives) மற்றும் ‘குடியேறியவர்’ (Migrants) என இருவேறு வகைகளில் சாதிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் வெளிமாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்குக் குடிபெயர்ந்த மாணவர்கள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்டங்களைப் பெறுவதில் நீண்டகாலமாகப் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி தங்களுக்குரிய இடஒதுக்கீட்டுச் சலுகைகளை சென்டாக் உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தகவலறிந்து அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தியதால் அங்கு சிறிது நேரம் தீவிர பதற்றம் நிலவியது.
