பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்களுக்கு பணிக்கொடை, வாரிசு வேலை: தலைமைப் பொறியாளரிடம் மனு!

புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பிராந்தியங்களில் பொதுப்பணித்துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற மற்றும் உயிரிழந்த வவுச்சர் ஊழியர்களின் குடும்பங்களுக்கு உரிய பணிக்கொடை, இழப்பீடு மற்றும் வாரிசு வேலை வழங்கக் கோரி பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளரிடம் மனு அளிக்கப்பட்டது.
புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வவுச்சர் அடிப்படையில் பணியாற்றி பலர் பணி ஓய்வு பெற்றுள்ளனர். அதேபோல் பணிக்காலத்திலேயே பலர் உயிரிழந்துள்ளதால், அவர்களை நம்பியிருந்த குடும்பத்தினர் தற்போது வாழ்வாதாரமின்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில், அரசு பணியாளர்கள் நல கூட்டமைப்பின் நிர்வாகி எம்.என். சரவணன் தலைமையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் சென்று பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் வீரசெல்வத்தை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி ஓய்வுபெற்ற மற்றும் உயிரிழந்த வவுச்சர் ஊழியர்களின் குடும்பத்தாருக்கு உரிய பணிக்கொடை மற்றும் இழப்பீடு உடனடியாக வழங்கப்பட வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வாரிசு அடிப்படையில் அரசு வேலை வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.