காரைக்கால் விவசாயிகள் கோரிக்கை: கல்லணையிலிருந்து தண்ணீர் திறக்க எம்.எல்.ஏ. நடவடிக்கை

காரைக்கால், ஆக. 25: காரைக்கால் மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, கல்லணையிலிருந்து தண்ணீரை உடனடியாக திறந்து விட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. காரைக்கால் விவசாயத்திற்கு ஆண்டுதோறும் ஜூன் மாதம் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம், ஆனால் இந்த ஆண்டு தாமதம் ஏற்பட்டதால் விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகினர். இது தொடர்பாக நெடுங்காடு தொகுதி விவசாய சங்கத்தினர், அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வி. விக்னேஸ்வரன், எம்.பி.பி.எஸ். அவர்களை நேரில் சந்தித்து முறையிட்டனர்.
விவசாயிகளின் துயரை உணர்ந்த எம்.எல்.ஏ. விக்னேஸ்வரன், இந்த பிரச்சினையை உடனடியாக புதுச்சேரி முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். அதன் தொடர்ச்சியாக, பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் வீரசெல்வம் அவர்களை நேரில் அழைத்து, காரைக்கால் மாவட்டத்தின் பாசனத் தேவையை பூர்த்தி செய்ய கல்லணையிலிருந்து தண்ணீர் திறக்கும் பணிகளை விரைவுபடுத்துமாறு உத்தரவிட்டார்.
அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி விவசாயிகளுக்கு சாதகமான முடிவை பெற்றுத் தந்த சட்டமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரனுக்கு, அப்பகுதி விவசாயிகள் தங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்தனர். இந்த நடவடிக்கையின் மூலம் காரைக்கால் மாவட்டத்தில் விவசாயப் பணிகள் விரைவில் முழுவீச்சில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
