பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம்: நிதியுதவி ரூ.7 லட்சமாக உயர்வு – துணைநிலை ஆளுநர் தகவல்
புதுச்சேரி, ஆக. 24: புதுச்சேரியில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (வீடு கட்டும் திட்டம்) பயனாளிகளுக்கான நிதியுதவி தொகையை ரூ.5.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏழை எளிய மக்களின் நலன் கருதி இந்த கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் திட்டத்தின் கீழ், மாநில அரசின் பங்கு மட்டும் சுமார் ரூ.4.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த சுமார் 1,150 பயனாளிகள் நேரடியாகப் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசு சார்பில் ரூ.15.9 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு செலவிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே வீடு கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும், புதிதாக வீடு கட்டத் திட்டமிட்டுள்ளவர்களுக்கும் இந்த அறிவிப்பு பெரும் ஊக்கத்தை அளித்துள்ளது. அரசு தொடர்ந்து இதுபோன்ற மக்கள் நலத் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்தி வருவதால், தகுதியுள்ள பொதுமக்கள் இந்த வாய்ப்பினை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

