டாக்டர் வீட்டில் கொள்ளை: 3 பேர் கைது
புதுச்சேரி கோரிமேடு இந்திரா நகர் விரிவாக்கப் பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழக மருத்துவப் பேராசிரியர் பினோத் நவில்சன் வீட்டில் நடந்த நகை கொள்ளை வழக்கில், 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பினோத் நவில்சனும், மத்திய அரசு ஊழியரான அவரது மனைவி ஜென்சி பிரிசில்லாவும் கடந்த 25-ம் தேதி வெளியூருக்கு சென்றிருந்தனர். பின்னர் வீடு திரும்பியபோது, கேட் மற்றும் வீட்டின் கதவு பூட்டுகள் உடைக்கப்பட்டு, அலமாரியில் இருந்த 45 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
ஜென்சி பிரிசில்லா அளித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்பகுதி கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், சைக்கிளில் வந்த நபர் ஒருவர் வீட்டை உடைத்து நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, புதுச்சேரி காமராஜர் சாலையில் சைக்கிளில் வந்த ஆற்காடு சுந்தரை போலீசார் பிடித்தனர். அவரது சைக்கிள் கூடையில் இருந்த பையில் இரும்புக் கம்பி மற்றும் நகைகள் இருந்ததால் சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். விசாரணையில், பேராசிரியர் வீட்டில் கொள்ளையடித்ததை சுந்தர் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
அவர் அளித்த தகவலின் அடிப்படையில், ஆற்காட்டைச் சேர்ந்த செந்தில்குமார் (41), மோகனவேல் (41) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். மூவரிடமிருந்தும் 270 கிராம் தங்க நகைகள், ரூ.1.12 லட்சம் ரொக்கம், சைக்கிள், இரும்புக் கம்பி மற்றும் டாடா ஏஸ் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன.

