தமிழ்நாடு

மேகேதாட்டு அணைக்கு எதிர்ப்பு: தஞ்சாவூரில் பாஜக கண்டனப் பேரணி, பொதுக்கூட்டம்

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு பகுதியில் அணை கட்டும் முயற்சியை முன்னெடுத்து, தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய நீரைத் தர மறுப்பதாகக் கூறி, கர்நாடக அரசைக் கண்டித்து தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் தஞ்சாவூரில் கண்டனப் பேரணி, ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றன.

தஞ்சை ரயில் நிலையம் அருகிலிருந்து தொடங்கிய பேரணி, கோஷங்களுடன் பழைய பேருந்து நிலையம் வரை சென்றது. காவிரி நீரின் உரிமையைக் காக்க வேண்டும், மேகேதாட்டு அணைத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், டெல்டா விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

நிகழ்வில் தேசிய பாஜக செயலாளரும் தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளருமான அரவிந்த் மேனன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், மாநிலப் பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன், சட்டமன்ற உறுப்பினர் கேப்டன் தமிழ்ச்செல்வன், தஞ்சாவூர் தெற்கு மாவட்டத் தலைவர் ஜெய் சதீஷ் உள்ளிட்ட மாவட்ட, மண்டல நிர்வாகிகளும் கட்சிப் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியவர்கள், கர்நாடக அரசின் அணைத் திட்டம் கீழ்நிலை மாநிலமான தமிழ்நாட்டின் உரிமையை மீறுவதாகக் குற்றம் சாட்டினர். காவிரி நீரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

டெல்டா மாவட்டங்களில் நெற்பயிரைக் காப்பாற்றவும், குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்கவும் தண்ணீர் திறப்பது கர்நாடகத்தின் ஒப்பந்தப் பொறுப்பு என்பதை பேச்சாளர்கள் நினைவூட்டினர்.

தமிழக அரசும் மத்திய அரசும் நீதிமன்றம் மற்றும் நீர் வாரியங்கள் வழியாக தமிழ்நாட்டின் உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்றும், இல்லையெனில் போராட்டம் தொடரும் என்றும் தலைவர்கள் எச்சரித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *