உப்பளம் தொகுதியில் ரூ.26.42 லட்சத்தில் புதிய மின்மாற்றி: தற்காலிக சபாநாயகர் அன்பழகன் இயக்கி வைத்தார்!

புதுச்சேரி:
புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குட்பட்ட நேதாஜி நகர் 2, சூளைமேடு பகுதியில் நீண்ட நாட்களாக நிலவி வந்த குறைந்த மின்னழுத்தப் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், ரூ.26.42 லட்சம் மதிப்பீட்டில் திறன் உயர்த்தப்பட்ட புதிய மின்மாற்றியை புதுச்சேரி சட்டப்பேரவை தற்காலிக சபாநாயகரும், உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஏ.அன்பழகன் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று இயக்கி வைத்தார்.
இப்பகுதியில் சீரான மின் விநியோகத்தை உறுதி செய்யும் நோக்கில், ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த பழைய 22 KV 315 KVA மின்மாற்றி முழுமையாக அகற்றப்பட்டது. அதற்குப் பதிலாக, ரூ.26,42,451 மதிப்பீட்டில் புதிய 11 KV புதைவிட கேபிள் இணைப்புடன் கூடிய 630 KVA உயர்திறன் கொண்ட புதிய மின்மாற்றி நிறுவப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் மின்னழுத்த குறைபாடு பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மின்துறை செயற்பொறியாளர் திலகராஜ், உதவி செயற்பொறியாளர் தணிகைவேலன், இளநிலை பொறியாளர் மூர்த்தி மற்றும் அதிமுக மாநில துணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, நேதாஜி நகர் வார்டு அதிமுக செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட மின்துறை ஊழியர்களும், அப்பகுதி பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.


