ஆசிய விளையாட்டு போட்டி: சாப்ட் டென்னிஸில் வெண்கலம் வென்று வரலாற்று சாதனை படைத்த ஜெய் மீனா – பிரதமர் மோடி வாழ்த்து!

புதுடெல்லி: ஆசிய விளையாட்டு போட்டியில் சாப்ட் டென்னிஸ் பிரிவில் இந்தியாவின் ஜெய் மீனா வெண்கலப் பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார். அவருக்குப் பிரதமர் நரேந்திர மோடி தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் தனிநபர் சாப்ட் டென்னிஸ் பிரிவில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய் மீனா, வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இதன் மூலம் ஆசிய விளையாட்டு வரலாற்றில் சாப்ட் டென்னிஸ் விளையாட்டில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “இந்திய சாப்ட் டென்னிஸ் விளையாட்டிற்கு இது ஒரு வரலாற்றுச் சாதனை தருணம். ஆடவர் தனிநபர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று, சாப்ட் டென்னிஸில் இந்தியாவின் முதல் ஆசிய விளையாட்டுப் பதக்க வெற்றியாளராக உருவெடுத்துள்ள ஜெய் மீனாவுக்கு எனது வாழ்த்துகள். இவரது இந்த சாதனை இந்திய விளையாட்டில் ஒரு மறக்க முடியாத புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளது. இந்த வெற்றி பல இளம் வீரர்களை சாப்ட் டென்னிஸ் விளையாட்டில் ஈடுபடவும், சாதிக்கவும் ஊக்கமளிக்கும்” எனப் பாராட்டியுள்ளார்.


