மத்திய ரிசர்வ் காவல் படையில் (CRPF) 521 தலைமை காவலர் மற்றும் காவலர் பணியிடங்கள்: விளையாட்டு வீரர்களுக்கு அரிய வாய்ப்பு!
புதுச்சேரி, 23/9/2026:
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய ரிசர்வ் காவல் படையில் (CRPF) விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் (Sports Quota) தலைமை காவலர் (Head Constable – GD) மற்றும் காவலர் (Constable – GD) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த தகுதிவாய்ந்த ஆண், பெண் விளையாட்டு வீரர்கள் இந்த அறிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ஹெட் கான்ஸ்டபிள் பிரிவில் 182 காலிப்பணியிடங்களும் (ஆண்கள் – 150, பெண்கள் – 32), கான்ஸ்டபிள் பொதுப்பிரிவில் 339 காலிப்பணியிடங்களும் (ஆண்கள் – 258, பெண்கள் – 81) என மொத்தம் 521 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஹெட் கான்ஸ்டபிள் பணிக்கு பே மேட்ரிக்ஸ்-04 அடிப்படையில் ரூ.25,500 முதல் ரூ.81,100 வரையிலும், கான்ஸ்டபிள் பணிக்கு பே மேட்ரிக்ஸ்-03 அடிப்படையில் ரூ.21,700 முதல் ரூ.69,100 வரையிலும் ஊதியம் வழங்கப்படும்.
இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் இணையவழியில் மட்டுமே பெறப்படும். தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://rect.crpf.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் வரும் அக்டோபர் 12, 2026 முதல் நவம்பர் 11, 2026 வரை விண்ணப்பிக்கலாம். சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ள விரும்பினால், வரும் நவம்பர் 12, 2026 முதல் நவம்பர் 14, 2026 வரை இணையதளம் வழியாக திருத்தம் செய்து கொள்ளலாம். விளையாட்டு பிரிவுகள் மற்றும் இதர கூடுதல் தகவல்களுக்கு 011-26160255 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

