தட்டாஞ்சாவடியில் கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்: என்.ஆர்.காங்கிரஸ் கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி பேச்சு!

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதியில் கடந்த முறையை விட கூடுதல் வாக்குகள் வித்தியாசத்தில் என்.ஆர்.காங்கிரஸ் அமோக வெற்றி பெற வேண்டும் என்று முதலமைச்சர் என்.ரங்கசாமி கட்சி நிர்வாகிகளிடம் வலியுறுத்தினார். புதுச்சேரியில் நடைபெற்ற என்.ஆர்.காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் உரையாற்றினார்.
கூட்டத்தில் முதலமைச்சர் பேசுகையில், மக்கள் அங்கீகரிக்கும் வகையில் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கொண்டு வந்துள்ளனர். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும் அரசாக நமது அரசு செயல்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 5 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசுப் பணிகள் முறையாக நிரப்பப்பட்டுள்ளன. பழைய மற்றும் புதிய திட்டங்கள் அனைத்தையும் பாகுபாடின்றி அனைத்து சமுதாய மக்களுக்கும் நமது அரசு சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது என்று குறிப்பிட்டார்.
மேலும், 5 ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட அனைத்து மக்கள் நலத்திட்டங்களும் முழுமையாக செயல்படுத்தப்படும். தட்டாஞ்சாவடி தேர்தல் களத்தில் யார் யார் போட்டியிடுகிறார்கள் என்பதும், மக்களுக்காக உண்மையாக யார் பணியாற்றுவார்கள் என்பதும் வாக்காளர்களுக்கு நன்றாகத் தெரியும். இங்கு என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் – திமுக அணிகளுக்கு இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று அரசின் சாதனைகளையும் சேவைகளையும் மக்களிடம் எடுத்துரைத்தால் வெற்றி நிச்சயம் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.


