புதுச்சேரியில் பணி பாதுகாப்பு, உரிய ஊதியம் கோரி நடத்துநர்கள் போராட்டம்: முடங்கிய பிஆர்டிசி மின்சார பேருந்து சேவை!
புதுச்சேரி: புதுச்சேரி அரசு சாலைப் போக்குவரத்து கழகமான பி.ஆர்.டி.சி சார்பில் இயக்கப்பட்டு வரும் மின்சார பேருந்துகளின் நடத்துநர்கள், உரிய ஊதியம் மற்றும் பணி பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இயக்கப்படும் மின்சார பேருந்து சேவைகள் முற்றிலுமாக முடங்கி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் அருகே திரண்ட 150-க்கும் மேற்பட்ட ஒப்பந்த நடத்துநர்கள் இப்போராட்டத்தை முன்னெடுத்தனர்.
சொசைட்டி வாயிலாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தங்களுக்கு நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.553 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுவதாகவும், அந்தத் தொகையும் மாதந்தோறும் 10-ம் தேதிக்குள் வழங்கப்படாமல் 15-ம் தேதிக்கு மேல்தான் தாமதமாக வழங்கப்படுகிறது என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர். மேலும், அடிப்படை ஊதியம், பி.எப். பிடித்தம், பணி பாதுகாப்பு மற்றும் நிரந்தர பணி உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை உரிமைகளும் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்று நடத்துநர்கள் தெரிவித்தனர்.
குறிப்பாக இரவு நேரங்களில் பணி முடிந்து வீடு திரும்பும் பெண் நடத்துநர்களுக்கு முறையான அடையாள அட்டை மற்றும் அடிப்படை பாதுகாப்பு வசதிகள் கூட செய்து தரப்படவில்லை என வேதனை தெரிவித்தனர். புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் 45-க்கும் மேற்பட்ட மின்சார பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வரும் சூழலில், இந்த திடீர் போராட்டத்தால் பேருந்து சேவை பாதிக்கப்பட்டு பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.


