சென்னையில் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய திறன் மையம்: 800 பேருக்கு வேலைவாய்ப்பு!

சென்னை, செப். 21:
சென்னையில் பிரபல காபி நிறுவனமான ஸ்டார்பக்ஸ் தனது உலகளாவிய திறன் மையத்தை (Global Capability Centre – GCC) அமைக்கவுள்ளது. இதன் மூலம் 800 தொழில்நுட்ப நிபுணர்களுக்கு உயர் ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகத்தில் இன்று தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில், முதலமைச்சர் முன்னிலையில் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி (Guidance Tamil Nadu) நிறுவனத்திற்கும், அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திற்கும் இடையே இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தானது.
இந்த புதிய திறன் மையம் சர்வதேச அளவிலான தொழில்நுட்பப் பணிகளை கையாளும் மையமாக செயல்படும் எனவும், இதன் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த தகுதிவாய்ந்த இளைஞர்களுக்கு உயர் ஊதியத்துடன் கூடிய சிறந்த வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
