புதுச்சேரி
உருளையன்பேட்டையில் நள்ளிரவு மின்தடை: எம்எல்ஏ நேரு அதிகாரிகளுடன் ஆலோசனை
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட கென்னடி நகர், சுப்பையா நகர், மகாலட்சுமி நகர், கண்ணன் நகர், திடீர் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக நள்ளிரவு நேரங்களில் திடீர் மின்தடை ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். சுமார் இரண்டு மணி நேரம் வரை நீடிக்கும் இந்த மின்தடையால், பணிக்கு செல்வோர் மற்றும் மாணவ மாணவியர் உள்ளிட்டோர் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து உருளையன்பேட்டை தொகுதி எம்எல்ஏ நேரு, மறைமலை அடிகள் சாலை பகுதியில் பொதுமக்களுடன் ஆலோசனை நடத்தி, மின்துறை உதவி பொறியாளர் மற்றும் இளநிலை பொறியாளர்களிடம் மின்தடைக்கான காரணத்தை கேட்டறிந்தார். பிரச்சனைக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்துறை அதிகாரிகள் உறுதியளித்தனர்.

