Uncategorized

தெற்கு ரயில்வேயில் ஸ்கவுட்ஸ் & கைட்ஸ் ஒதுக்கீட்டில் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க முழு விவரங்கள்!

சென்னை, செப். 18: தெற்கு ரயில்வேயின் கீழ் இயங்கும் ரயில்வே பணியாளர் தேர்வு பிரிவு (RRC) சார்பில், சாரணர் மற்றும் வழிகாட்டி (Scouts & Guides) ஒதுக்கீட்டின் கீழ் குரூப் ‘சி’ மற்றும் குரூப் ‘டி’ பணிகளுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 17 காலியிடங்களுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து இணையவழியில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இவ்வறிவிப்பின்படி, பே மேட்ரிக்ஸ் லெவல்-1 பிரிவின் கீழ் குரூப் ‘டி’ (டிராக் மெயின்டெய்னர்-IV) பணிக்கு 10 காலியிடங்களும், லெவல்-2 பிரிவின் கீழ் பல்வேறு குரூப் ‘சி’ பணியிடங்களுக்கு 7 காலியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க 10-ஆம் வகுப்பு தேர்ச்சி, ஐ.டி.ஐ, தொழிற்பயிற்சி அல்லது 12-ஆம் வகுப்பு (+2) கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 01.01.2027 தேதியின்படி விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 18 முதல் 30 ஆண்டிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் ஸ்கவுட்ஸ் & கைட்ஸ் இயக்கத்தில் குறிப்பிட்ட காலத்திற்கு தீவிர உறுப்பினராக செயல்பட்டிருக்க வேண்டும். மேலும், மாநில அளவில் குறைந்தது 2 நிகழ்வுகள் அல்லது தேசிய அளவில் 1 நிகழ்வில் பங்கேற்று உரிய அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும். தகுதியானவர்கள் சான்றிதழ் பரிசீலனை, எழுத்துத் தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனை அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

பொது, ஓபிசி மற்றும் இடபிள்யுஎஸ் பிரிவினருக்கு ரூ.500-ம், எஸ்சி, எஸ்டி, பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.250-ம் விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் தெற்கு ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://sr.indianrailways.gov.in வழியாக 2026 செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 18 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன